5 Sep 2010 Sun |
|||
|
அறிவியல் தமிழ் தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது. தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும், அறிவியல் தமிழ் இக்காலத்தில், மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.
"மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளைப் பாதிக்கின்றது, எல்லைகளை
வரையறுக்கின்றது; மொழிக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வலுவான தொடர்பு மேலும் பல கோணங்களில் ஆயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழை மொழியாகக் கொண்டவர்கள், அறிவியல்-தொழில் நுட்பங்களைத் தமிழில் படிக்கையில் ஒரு வேறுபட்ட புரிதல் ஏற்படுகின்றது, வேறுபட்ட சிந்தனைக்கு வழி செய்கின்றது. புதிய பரிமாணங்களில் (paradigms), மாறுபட்ட சூழலில் (socio-cultural context) விடயங்களை ஆராய வழி செய்கின்றது. மேலும் தமிழ் சமுதாயம் சார்ந்த புரிதல்களை வளர்த்துக்கொள்ளவும், தமிழர் தேவைகளை நிறைவு செய்யவும். ஆங்கில உலகால் புறக்கணிக்கப்பட்ட துறைசார் விடயங்களை ஆராயவும் அறிவியல் தமிழ் தேவை. தமிழரின் வரலாறு, பண்பாடு, சமயம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பன்முகத் தேடல்களுக்கு அறிவியல் தமிழ் உதவும்.
எல்லா மொழிகளும் இயல்பாகவே ஆய்வுத் திறன் பெறுவதில்லை. அதற்குரிய மொழித் திறனும், அந்த மொழியில் கட்டமைக்கப்பட்ட சிந்தனைப் புலமும் தேவை. ஆய்வு திறன் இல்லாத மொழியில் ஆய்வு ரீதியில் சிந்தனை செய்யவோ சிந்தனைகளை வெளிப்படுத்தவோ முடியாது. அறிவியல் தமிழ் ஊடாகவே தமிழின் ஆய்வுத் திறனை வளர்த்துப் பயன்படுத்த முடியும்.
|
||